தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இந்து விரோத மனப்பான்மையை கைவிட வேண்டும். இல்லாவிடில் தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) அமைப்பின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கூறியிருக்கிறார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 60-வது ஆண்டு ஸ்தாபனத் திவஸ் தொடக்க நிகழ்ச்சியாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு பாரதமாதா பூஜை நடத்தவும், வீரம் எழுப்புதல் யாத்திரையை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கலந்துகொள்வாத இருந்தது. ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததோடு, பாரத மாதா பூஜை நடத்தச் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினரை கைது செய்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) அமைப்பின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கண்டித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “சனாதன இந்து தர்மத்தின் மீது முதலில் விஷத்தை கக்கிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தற்போது இந்து அமைப்புகள் நடத்தி வரும் அமைதியான நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கிறது.
இதன் மூலம், தமிழகத்தின் புனித பூமியிலிருந்து இந்து தர்மத்தையும், அதை கடைப்பிடிப்பவர்களையும் ஒழிக்க இறை விரோத, அசுத்தமான அஜெண்டாவில் தி.மு.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்பது தெளிவாகிறது. பஜ்ரங் தள் ஒரு தேசியவாத மற்றும் தேசபக்தி அமைப்பாகும். இது நாட்டின் இளைஞர்களிடையே தேசிய உணர்வு மற்றும் தேசபக்தியின் உணர்வை தட்டி எழுப்புகிறது. மேலும், தேசத்திற்கான தங்கள் கடமையை நிறைவேற்ற அவர்களை ஊக்குவிக்கிறது.
அப்படி இருக்க, தேசபக்தி அமைப்பின் தன்னார்வலர்களைக் கைது செய்வதும், இந்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமன்றி, தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் செயலாகும். தென் தமிழகத்தில் பஜ்ரங் தளம் நடத்தும் “சௌர்ய ஜாக்ரன் யாத்ரா” (வீரம் எழுப்புதல் யாத்திரை) கன்னியாகுமரியில் இருந்து தொடங்கவிருந்தது. இந்த யாத்திரையை திமுக அரசு அனுமதிக்கவில்லை.
அதேபோல, பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்கவில்லை. மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து விழா அரங்குகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதோடு, யாத்திரையை தொடங்குவதற்காக கன்னியாகுமரிக்கு வந்த தென் தமிழக அமைப்புச் செயலாளர் சேதுராமன், பஜ்ரங்தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பீமாராவ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காரியகர்த்தாக்களையும் கைது செய்திருக்கிறது.
அதேபோல, வடதமிழகத்தில் சென்னையில் இருந்து தொடங்கும் யாத்திரைக்கும் தி.மு.க. அரசு அனுமதி வழங்கவில்லை. உள்ளரங்க கூட்டத்துக்கும் அனுமதிக்கப்படவில்லை. எல்லா இடங்களிலும் காவல் படைகளை நிலைநிறுத்தி இருக்கிறது. ஸ்டாலின் அரசின் இந்த அடக்குமுறையை வி.ஹெச்.பி. வன்மையாகக் கண்டிக்கிறது. அதோடு, தி.மு.க. அரசின் இந்து விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறது.
புண்ணிய பூமியான தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்துத்துவம் ஊடுருவி இருக்கிறது. அப்படிப்பட்ட களத்தில் இந்துக்களுக்கு எதிரான மனப்போக்கு ஒருபோதும் வெற்றியடையாது. தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் அணுகுமுறை இதேபோல தொடர்ந்து நீடித்தால், தமிழகத்தில் வி.ஹெச்.பி. மிகப் பெரிய போராட்டத்துக்குத் தயாராக வேண்டியிருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.