ஸ்காட்லாந்திலுள்ள சீக்கிய குருத்வாராவுக்குச் சென்ற இந்திய தூதர் விக்ரம் துரைசாமி திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு, குருத்வாரா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள சீக்கிய குருத்வாரா நிர்வாகத்துடனான சந்திப்புக்காகச் சென்றார். இதையறிந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலர், இந்தியத் தூதரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பினர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இச்சம்பவத்துக்கு இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் பகுதிக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யன், கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்ததோடு, நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைவருக்காவும் திறந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் குருத்வாரா நிர்வாகம், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கிளாஸ்கவ் குருத்வாரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குருத்வாராவில் நடைபெறவிருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி வருகை தந்திருந்தார். ஆனால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி இருக்கிறது.
இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குருத்வாராவைப் பொறுத்தவரை அனைத்து மதத்தினருக்காகவும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்லலாம்.
சீக்கிய வழிபாட்டுத் தலத்தின் அமைதியான நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில், ஒழுங்கீனமான நடவடிக்கைக் கையாண்ட மர்ம நபர்கள் மீது ஸ்காட்லாந்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறது.