கோழிக்கோட்டில் தெற்குக் கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் திமிங்கிலம் கரை ஒதுங்கியது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், கோழிக்கோட்டில் தெற்குக் கடற்கரையில் நேற்று ஒரு நீல திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனை அவ்வழியாக சென்ற மீனவர் ஒருவர் பார்த்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள மீனவ மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. இதனை மீனவ மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, 50 அடி நீளம் கொண்ட திமிங்கலம், இறந்த நிலையில் கரையொதுங்கி இருப்பதாக கோழிக்கோடு மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், இறந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.
இறந்த திமிங்கிலத்தை உடல் கூறாய்வு செய்த பிறகு, கடற்கரையிலேயே பெரிய பள்ளத்தைத் தோண்டி புதைக்க உள்ளதாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், திமிங்கலம் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிவதற்காக, திமிங்கல உடலின் சில பகுதிகள் போபாலிலுள்ள தேசிய ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், திமிங்கலம் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்பதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.