திருமலை திருப்பதியில், எம்பெருமான் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சுமார் 25 முதல் 30 மணி நேரம் வரை ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
108 திவ்விய தேசங்களில் மிகவும் புகழ் வாய்ந்த திருக்கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலும் ஒன்று. இது, ஆந்திர மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வைணவத் தலமாகும். இங்கு உள்ளூர், வெளியூர்களிலிருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தற்போது, பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்சி மாதம் நடைபெற்று வருவதால், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியில் அலைமோதுகிறது. குறிப்பாக, சனிக்கிழமைகளில் நடக்கக்கூட இடம் இல்லாமல் உள்ளது.
பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் தங்கும் விடுதிகள் ஹவுஸ்புல்லாக உள்ளது. மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திரும்பி திசை எல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்படுவதாலும், ஒவ்வொரு நபரும் சுவாமி தரிசனம் செய்ய 25 முதல் 30 மணி நேரம் ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.