பொய் செய்திகளைப் பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
தூய்மை பாரதத்தில் மற்ற மாநிலங்கள் எடுத்துக்கொண்ட அக்கறையை கூட தமிழகம் எடுத்து கொள்ளவில்லை.
இன்றைக்கு என்னுடைய நோக்கமே பாஜக கட்சியை வலுபடுத்த வேண்டும். ”என் மண் என் மக்கள்” யாத்திரை மக்கள் மனதில் போய்க்கொண்டிருக்கிறது.
57 சதவீத வாக்காளர்கள், 36 வயதுக்குள் இருக்கின்றனர். இவர்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்களிடையே அரசியல் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாதயாத்திரை தொடர்பாக விளக்கம் அளிக்கவே டெல்லி பயணம். தினசரி 25 ஆயிரம் மக்களை சந்தித்து பேசுகிறேன். 60 நாட்களில் எந்த அரசியல் தலைவரும் செய்யாததை செய்து கொண்டிருக்கிறேன். மக்களிடம் தெரியும் எழுச்சி 2024 மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும்.
பாஜகவை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. பொய் செய்திகளை பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
முதலில் விவசாயி, பிறகு தான் அரசியல்வாதி. மாநிலத் தலைவரின் பதவி என்பது வெங்காயம் மாதிரி, வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது அது போல தான் தலைவர் பதவியும், பதவியை தூக்கி எறிந்து வந்தவன் நான். இதே காட்டிலும் 10 மடங்கு அதிகாரத்தை பார்த்தவன்.
மோடிக்காக அரசியல் வந்திருக்கிறேன், மோடியை தவிர இன்னொரு தலைவன் இந்தியாவிற்கு 100 ஆண்டுகள் ஆனாலும் கிடைக்கப்போவது கிடையாது.
அண்ணாமலை இடம் அட்ஜஸ்ட்மென்ட் பாலிடிக்ஸ் எப்போதுமே கிடையாது. என்னை யாருக்காவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். கே. பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு அரசர் அமைச்சரவையில் அரசவைப் புலவர் போல செயல்படுகிறார். திமுகவை புகழ்ந்து பாடுவது மட்டுமே இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் முழு நேர வேலையாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட் என்றாலே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரி தான். திமுகவின் ஊழல் புகார்கள் தான், பாத யாத்திரையில் அதிகமான புகார்களாக பெறப்பட்டுள்ளது எனத் தெரிவத்தார்.