மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஆனால், பா.ஜ.க. மாநிலத்தில் செழிப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, ஆளும் பா.ஜ.க.வும், எதிர்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தலைமையிலான மத்தியப் பிரதேச அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். ஊழல் பெருகி விட்டதாகவும், அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து, ராகுலுக்கு பதிலளிளித்து முதல்வர் சௌகான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ராகுல் மத்திய பிரதேசத்துக்கு வந்து நிறையப் பேசினார். ஆனால், அவர் பொய்களை மட்டுமே பேசினார். ராகுலின் பொய்யான வாக்குறுதிகளுக்கு யாரும் பலியாகப் போவதில்லை. மக்களுக்கு எல்லாம் தெரியும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சிவராஜ் சிங் சௌகான், “இந்தூரில் பா.ஜ.க. அரசு செய்த வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் ஆட்சியில் செய்ததா என்று மாநில மக்களிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியிடம் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் இல்லை. ஆனால், இன்று வளர்ச்சிப் பணிகளுக்கு பணப் பற்றாக்குறையே இல்லை” என்று கூறினார்.
முன்னதாக, இந்தூரில் முதல்கட்ட மெட்ரோ இரயில் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சௌகான், தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று எனது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது இந்தூர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்தூரில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ ஒரு ஆரம்பம்தான். ஒன்றாக இணைந்து இந்தூரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றுவோம். இப்போது இந்தூரின் வளர்ச்சி வேகம் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.