திருத்தணி முருகன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்த பக்தர்களால், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குத் திருத்தணிகை என்றும் பெயர் உண்டு. முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திருத்தணி திகழ்கிறது. வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமான் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்குள்ள முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே வேல், சேவல் கொடி தனியே வைக்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த திருக்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.
தற்போது, தொடர் விடுமுறை எதிரொலியாக, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோவிலில் முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய பொது வழியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் இரண்டு மணி நேரம் கடும் வெயிலில் காத்திருந்தனர்.
மலைக்கோவில் அடிவாரத்திலிருந்து கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மலையடிவாரத்தில் திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் நேரடியாக வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுவதற்கு முயற்சி செய்தார். ஆனாலும், போக்குவரத்து நெருக்கடி தீர்ந்தபாடு இல்லை.
வாகனங்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கும் பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு மலைக்கோயில் அடிவாரத்தில் திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.