கன்னியாகுமரியில் 40 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழகிய பாண்டிபுரம் வனச்சரகம் உள்ளது. இந்த பகுதியில் இஞ்சிக்கடவு வனப்பகுதி அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில், ஒரு எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதிகாலையில் அந்த பகுதி வழியாக வந்த கிராம மக்கள், யானை இறந்து கிடப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்தற்கு வனத்துறையினர் நேரில் வந்து யானை இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், யானையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள வனப்பகுதி மக்கள், உயரமான பாறைகளில் இருந்து யானைகள் அடிக்கடி இப்படி விழுவதும், அதில் ஒரு சில யானைகள் இறந்தும் போய் உள்ளது என்றனர். இதனையடுத்து, வனத்துறையினர் யானை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, தேசிய விலங்கான புலி மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் அரிய விலங்கான யானை ஆகியவை அடிக்கடி மர்மான முறையில் இறந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வனத்துறையினர் தமிழகம் வந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.