தெலங்கானாவில் சாலை, இரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற முக்கியமான துறைகளில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், மஞ்சள் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் , தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதாகவும் அறிவித்தார்.
மகபூப்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்குப் பிறகு, மஞ்சள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து, உலகளாவிய தேவையும் அதிகரித்திருக்கிறது. ஆகவே, தொழில்ரீதியாக அதிக கவனம் செலுத்துவதும், உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை மஞ்சளின் மதிப்புச் சங்கிலியில் முன்முயற்சி எடுப்பதும் முக்கியமாகும். மஞ்சள் விவசாயிகளின் அவசியத்தையும், முக்கிய உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் எதிர்கால வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது” என்றார்.
தெலுங்கானா விவசாயிகள் மஞ்சளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். நிஜாமாபாத், நிர்மல் மற்றும் ஜக்தியால் மாவட்டங்கள் மஞ்சள் சாகுபடிக்கு பெயர் பெற்றவை. இங்கிருந்து விரலி மற்றும் குமிழ் வகை மஞ்சள் உள்நாட்டு வணிகத் தேவைகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஞ்சள் தவிர, தேநீர், காபி, மசாலா, சணல், தேங்காய் உள்ளிட்டவைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணா நிலையத்தில் இருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) – ராய்ச்சூர் – ஹைதராபாத் (கச்சேகுடா) ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவையானது, தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத், ரங்காரெட்டி, மகபூப்நகர், நாராயண்பேட்டை ஆகிய மாவட்டங்களை கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்துடன் இணைக்கும். இச்சேவையானது, பின்தங்கிய மாவட்டங்களான மகபூப்நகர் மற்றும் நாராயண்பேட்டையில் உள்ள பல பகுதிகளுக்கு முதல் முறையாக இரயில் இணைப்பை வழங்கும். இது மாணவர்கள், தினசரி பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் கைத்தறித் தொழிலுக்கும் பயனளிக்கும்.
அதேபோல, நாக்பூர் – விஜயவாடா பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக உள்ள முக்கியச் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்களில் 108 கி.மீ. நீளமுள்ள ‘நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை வாரங்கலில் இருந்து கம்மம் வரை NH-163G பிரிவு’ மற்றும் 90 கி.மீ. நீளமுள்ள ‘NH-163G இன் கம்மம் முதல் விஜயவாடா வரையிலான நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை ஆகியவை அடங்கும். இச்சாலைத் திட்டங்கள் மொத்தம் 6,400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். இத்திட்டங்களால் வாரங்கலுக்கும், கம்மத்துக்கும் இடையிலான பயண தூரம் சுமார் 14 கி.மீ. மற்றும் கம்மம் மற்றும் விஜயவாடா இடையேயான தூரம் சுமார் 27 கி.மீ. குறையும்.
மேலும், இந்நிகழ்ச்சியின்போது தேசிய நெடுஞ்சாலை-365BB-ன் சூர்யாபேட்டை முதல் கம்மம் வரையிலான 59 கி.மீ. நீளமுள்ள நான்கு வழிச்சாலை திட்டமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுமார் 2,460 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இத்திட்டம், ஹைதராபாத் – விசாகப்பட்டினம் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். மேலும், பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் உருவாக்கப்பட்டது. இது கம்மம் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளுக்கும் சிறந்த இணைப்பை வழங்கும். இது தவிர, ’ஜக்லேயர் – கிருஷ்ணா புதிய இரயில் பாதையின் 37 கி.மீ. தொலைவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட புதிய ரயில் பாதைப் பகுதி, பின்தங்கிய மாவட்டமான நாராயண்பேட்டையின் பகுதிகளை முதல் முறையாக இரயில்வே வரைபடத்தில் கொண்டு வருகிறது.
அதோடு, முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.சுமார் 2,170 கோடி ரூபாய் செலவிலான ஹாசன்-செர்லப்பள்ளி எல்.பி.ஜி. குழாய் திட்டம், கர்நாடகாவின் ஹாசனில் இருந்து செர்லப்பள்ளி (ஹைதராபாத் புறநகர்) வரை பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் எல்.பி.ஜி. விநியோகத்தை வழங்குகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) கிருஷ்ணாப்பட்டினத்திலிருந்து ஹைதராபாத் (மல்காபூர்) வரையிலான மல்டி-ப்ராடக்ட் பெட்ரோலியக் குழாய்க்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தில் 1,940 கோடி ரூபாய் செலவில் 425 கி.மீ.க்கு குழாய் அமைக்கப்படும். இப்பகுதியில் பாதுகாப்பான, வேகமான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பெட்ரோலியப் பொருட்களை குழாய்வழி வழங்கும்.
அதேபோல, ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதாவது, ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்; கணிதம் மற்றும் புள்ளியியல் பள்ளி; ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்; விரிவுரை மண்டப வளாகம் – III; மற்றும் சரோஜினி நாயுடு ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இணைப்பு). ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேம்பட்ட வசதிகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.