தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். உலகப் புகழ் பெற்ற இந்த திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 24-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவிற்காக விரதம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் கொடியேற்றம் முடிந்ததும், தங்களது வலது கையில் கப்புகட்டி பின்பு தங்களுக்குப் பிடித்தமான, சிவன், பார்வதி, காளி, துர்கை, கிருஷ்ணர், முருகன், அய்யனார், ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து, அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவர். இதில், சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41 மற்றும் 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள்.
திருவிழா தொடங்க இன்னும் இரண்டு வாரமே இருப்பதால், வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கிரீடம், கண்மலர், கவசம், வாள், ஈட்டி, திரிசூலம், வேல், கத்தி, சடைமுடி, நெற்றி பட்டை, வீரபல், ஒட்டியாணம் உட்பட பல்வேறு வேடப்பொருட்கள் உடன்குடி, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தயாராகி, பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.