பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், 108 வைணவ திவ்வியதேச ஸ்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 58 சன்னதிகள் என சுமார், 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இங்குள்ள மூலவர் சன்னதியில் மற்ற திவ்ய தேச பெருமாள்கள் அனைவரும் அடைக்கலமாகி, அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது அவர்கள் பெருமாளைத் தரிசனம் செய்வதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது. கல்யாணத் தடை நீங்கி, நலமும், வளமும் வாரி வழங்குபவராக இங்குள்ள தாயார் பெரிய பிராட்டியார் உள்ளார்.
விஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அம்சமான சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவர், நவக்கிரக தோஷம், பில்லி – சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லைகளை நீக்குபவராக உள்ளார்.
உடையவர் எனப்படும் ஸ்ரீராமானுஜர் பூதவுடல் பாடம் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இங்குக் குருவருள் பொங்குகிறது.
பெருமாள் எதிரே, 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக மூலிகை வர்ண கருடாழ்வார் வீற்றுள்ளார். இவரை வணங்கினால், பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
திருக்கோவிலில் 7 பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தரைத்தளத்தில் நடந்தாலே அக்குபஞ்சர் வேலை செய்து உடல் ஆரோக்கியம், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் போன்ற எல்லா நோய்களும் பறந்துவிடும் என்பது உண்மை. எனவே, பக்தியோடு ஸ்ரீரங்கம் திருக்கோவில் செல்வோம், வளமும், நலமும் பெறுவோம்.