இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் யாருக்கு எட்டாவது இடம் ?
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.
இதனிடையே கடைசி நேரத்தில் இந்திய அணியில் அக்சர் படேல் நீக்கப்பட்டு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற விவாதம் இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக8 வது இடத்தில் எந்த வீரர் களமிறக்கப்படுவார் என்ற விவாதம் தீவிரமாகியுள்ளது.
பவுலிங் ஆல்ரவுண்டருக்கான இடத்தில் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே பிளேயிங் லெவனில் சேர்க்க முடியும். இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தால், இந்திய அணியின் ஷர்துல் தாக்கூரால் விளையாட முடியும். ஒருவேளை 3 வேகப்பந்துவீச்சாளர்கள் போதும் என்று முடிவு செய்தால், பும்ரா, சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே களமிறங்குவார்கள்.
இதனால் இந்திய அணியும் ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் என்று 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க முடியும். இது ஆடுகளத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டாலும், இருவரின் பயிற்சியிலும் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற பயிற்சியின் போது ஷர்துல் தாக்கூர், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கும் பந்துவீசி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியில் அஸ்வினுக்கு அதிக ஸ்வீப் ஷாட் விளையாட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடவும் பயிற்சி செய்துள்ளார். கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதோடு, த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் மூலம் பந்தை வீச வைத்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பந்தை கையில் எடுத்து பவுலிங் பயிற்சியில் ஈடுபட, ஷர்துல் தாக்கூர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியில் மொத்தமாக 4 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவருமே பேட்டிங்கிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் யாருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.