கர்ம வீரர் காமராஜர் ஜூலை 15, 1903 ஆண்டு விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.
1954 ஆம் அண்டு தமிழகத்தில் முதலமைச்சராக பதவிவகித்தார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற இவர் ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டு தமிழகத்தில் 27,000 பள்ளிகளை கட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.
அவரது ஆட்சி காலத்தில் 10 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய திட்டங்களை செயல்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில் பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
ஆகிய முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும், பெருந்தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன.
காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.
இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்பட்டார், அப்படி பட்ட இவர் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் இறைவனடி சேர்ந்தார்.