சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் அதப்படக்கி கண்மாய் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காரைக்குடி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதப்படக்கி கண்மாயின் மையப்பகுதியில் 3 அடி உயரத்தில் திருவாழிக்கல் என்ற தானக்கல் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது, முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கோவில் அல்லது தனி நபர்களுக்கு தானம் வழங்குவதை ஒரு மரபாகக் கொண்டிருந்தனர்.
அவ்வாறு வழங்கும் போது சைவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் தேவதானம் என்றும், வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் திருவாழிக்கல் திருவிடையாட்டம் என்றும் அழைப்பர்.
சைவ கோயில்களுக்கு வழங்கப்படும் நில தான கல்லில் சூலம் அடையாளமாக இருக்கும். வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட அடையாளம் காணப்படும். அதப்படக்கியில் கிடைத்த 3 அடி உயரமுள்ள இந்த தானக்கல்லில் பூ போட்ட சக்கரம் மற்றும் சங்கு போன்ற அடையாளங்கள் கோட்டோவியமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
திருவாழிக்கல் தானக்கல் வைணவ கோயில்களுக்கு நிலம் தானமாக வழங்கியதற்கு அடையாளம். தொன்மை வாய்ந்த இத்தகைய வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறினார்.