நாடு முழுவதும் 29 வந்தே பாரத் இரயில்கள் ஒரே சமயத்தில், வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டது.
ஜப்பானின் புல்லட் இரயில்கள் 7 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் நிலையில், வந்தே பாரத் இரயில்களின் சுத்தம் செய்யும் நேரத்தை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டது. மேலும், மற்ற விரைவு இரயில்கள் அடுத்த பயணத்திற்குப் புறப்படுவதற்கு அதிக நேரம் இடைவெளி உள்ள நிலையில், வந்தே பாரத் இரயிலுக்குக் குறைவான நேர இடைவெளி மட்டுமே உள்ளதால், அவற்றை விரைவாகச் சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து, இரயில்களைச் சுத்தப்படுத்தும் பணி, 14 மினிட்ஸ் மிராக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் என்று இரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று டெல்லி, சென்னை, ஷீரடி உட்பட நாடு முழுவதும் 29 இரயில் நிலையங்களில், வந்தே பாரத் இரயில்களை வெறும் 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
டெல்லி கன்னாட் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயிலை 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் பணியை இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, வழக்கமாக வந்தே பாரத் இரயில்களைச் சுத்தப்படுத்த 45 நிமிடங்களாகும். தற்போது 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் பணி அறிமுகமாகி இருக்கிறது. பயணிகள் அனைவரும் இரயிலிலிருந்து இறங்கி விட்டதை உறுதி செய்த பின்னர், சுத்தப்படுத்தும் பணி உடனடியாக தொடங்கும். அதற்காக ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலுக்கும் பிரத்யேகஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்களை சுத்தப்படுத்தும் பணியை எப்படி செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரயிலின் உள்ளேயும் வெளியையும் சுத்தப்படுத்தும் பணிகளைச் செய்வார்கள். இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.