ஆசிய விளையாட்டு கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் இன்று ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக விளையாடி வந்த ருத்ராஜ் 25 ரன்களிலும் திலக் வர்மா மற்றும் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் நிதானமாக விளையாடி துபே 25 ரன்களும் ரிங்கு 37 ரன்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்திருந்தது.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணியின் தொடக்க வீரர்களான குஷால் மற்றும் ஆசிப் களமிறங்கினர். குஷால் 28 ரன்களிலும் ஆசிப் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்த ஆட்டமிழக்க திபேந்திர சிங் 32 ரன்களையும் குஷால் மல்லா மற்றும் ஜோரா தலா 29 ரன்களையும் எடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் நேபாள அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.