எல்லையில் அதிகரித்து வரும் சீன நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ.) அத்துமீறல்களைக் கருத்தில் கொண்டு, லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இந்தியா-சீனா எல்லையில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) எல்லைப் பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
2020 ஜூன் மாதம் லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்துக்கும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதோடு, உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது. மேலும், எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், அனைத்து எல்லையோர கிராமங்களிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்திலுள்ள சுனா செக்டாரில் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் உள்ள முதல் கிராமம் மாகோ. இக்கிராமத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கப்பட்டன. மேலும், இந்தியா-சீனா எல்லை இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையின் 180 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. சமீபத்தில் மேலும் 45 புறக்காவல் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், இந்தியா-சீனா எல்லை முழுவதும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எல்லை உளவுப்படை என்று அழைக்கப்படும் இந்த உளவுத்துறை பணியகத்தில் 4 முதல் 5 அதிகாரிகள் வரை இருப்பார்கள். இவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்கள், எல்லைக்கு அப்பால் உள்ள செயல்பாடுகளைக் கண்காணித்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் விவரத்தை பகிர்ந்து கொள்வார்கள். எனினும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்த தொகையை வெளியிட மறுத்துவிட்டது.