மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் வருவதைப் போல திடீரென ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் பண மழை பொழிந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் கடந்த 2017யில் ஸ்பானிஷ் மொழியில் வெளியானது. அதில் பலர் வங்கிக்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளை அடித்துவிடுவார்கள். சீரிஸில் நடந்த அதே சம்பவம் இப்போது உண்மை வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் மணி ஹெய்ஸ்ட் உடை அணிந்த அந்த நபர், காருக்கு மேல் ஏறி நின்று கொண்டு பண மழை பொழிகிறார். காரில் சிவப்பு ஜம்ப்சூட் உடை மற்றும் மாஸ்க் அணிந்த அந்த நபர் ரூ. 20 நோட்டுகளை அள்ளி வீசியுள்ளார். இதனால் அங்கே அவரை சுற்றி பொதுமக்கள் திரண்டனர்.
முதலில் அங்கே சென்றவர்கள் இது சினிமா ஷூட்டிங் என்றும் இது போலியான ரூபாய் நோட்டுகளாகவே இருக்கும் என மக்கள் நினைத்துள்ளனர். அப்போது ஒரு சிலர் அதை எடுத்து பார்க்கும் போதுதான் அது உண்மையான ரூபாய் நோட்டுகள் என்பது அவர்களுக்குத் தெரிந்துள்ளது.
அந்த வீடியோவிலும் கூட ஒருவர், அவர் உண்மையான 20 ரூபாய் நோட்டுகளைத் தான் போடுகிறார்” என கத்துவது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் பலரும் அங்கே ஒரே இடத்தில் குவிந்தனர். இப்படி பலரும் அங்கே பணம் எடுக்கக் குவிந்த நிலையில், அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியது. இதையடுத்து அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அந்த மாஸ்க் நபரைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக இப்படிச் செய்தார்.. அது யாருடைய பணம் என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் வங்கிகளில் இருந்து கொள்ளையடித்து பணத்தை மக்களுக்கு வழங்குவார்கள். இதனால் நெட்டிசன்கள் சிலர் இவரும் வங்கியில் கொள்ளை அடித்திருக்கலாம் என்றும் அருகில் உள்ள வங்கிகள் பத்திரம் என்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.