நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனத்தின் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர், அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, பங்குதாரர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏன் சோதனை? எதற்காக கைது நடவடிக்கை? என்பதை விரிவாகக் காண்போம்.
நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியராக இருப்பவர் பிரபீர் புர்காயஸ்தா. இந்த இணையதளத்தின் முக்கியப் பங்குதாரர் அமித் சக்கரவர்த்தி. இந்நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வந்தது. மேலும், நஷ்டத்தில் இயங்கி வந்த இந்நிறுவனம், கடந்த 2018-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக நஷ்டத்தில் இயங்குவதாக பதிவு செய்யப்பட்டது. அதேசமயம், அதே ஆண்டு நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் வங்கிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 38 கோடி ரூபாய் நிதி வரவு வைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்தை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. விசாரணையில், மேற்கண்ட தொகை சீனாவிடமிருந்து பெறப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு நியூஸ் கிளிக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் நியூஸ் கிளிக் இணையதள நிறுவனம் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட வெளிநாடுகளில் செயல்படும் சீன நிறுவனங்களிடம் இருந்து 86 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக நிதி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இப்பரிவர்த்தனையை தீவிரமாக ஆய்வு செய்தபோது, சீன நாட்டின் ஆதரவாளரான நெவில் ராய் சிங்கம் என்பவர் மூலம் பணம் கைமாறி இருப்பது தெரியவந்தது. இவ்வாறு பெறப்பட்ட பணம், மத்திய அரசுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் செய்திகளை வெளியிடுவதற்காக இடது சாரி செய்தியாளர்களான டீஸ்டா செதல்வாட், ஊர்மிலேஷ், பரஞ்சோய் குஹா தாகுர்தா நியூஸ் கிளிக்கின் மற்றொரு பங்குதாரர் பபாடித்யா சின்ஹா, மற்றும் டீஸ்டா செதல்வாட்டின் கணவர் ஜாவேத் ஆனந்த், மகள் தாமரா, மகன் ஜிப்ரான், கௌதம் நவ்லகா, ஷர்னா அபிஸ்ஹர்தா என பலருக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீதும், அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மீதும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை ஆயத்தமானது. இதையறிந்த பிரபீர், தன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவின் அடிப்படையில், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அமலாக்கத்துறை அமைதி காத்து வந்தது. இந்த சூழலில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் “தி நியூயார்க் டைம்ஸ்” இதழ், நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனம் பற்றி பரபரப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.
அந்த செய்தியில், இந்தியாவுக்கு எதிராக அவதூறாகவும், பொய்யாகவும் செய்திகளை வெளியிட சீன ஆதரவு நிறுவனங்களிடம் இருந்து நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனம் நிதி பெறுவதாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும், இதற்காக நெவில் ராய் சிங்கம் என்கிற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, தி நியூயார்க் டைம்ஸ் செய்தியை அடிப்படையாக வைத்து, டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ், நியூஸ் கிளிக், சீனா ஆகியவை ஒரே தொப்புள் கொடி உறவுகள் என்று கடுமையாக சாடினார். மேலும், அந்நியக் கைக்கூலிகளாக செயல்படும் நியூஸ் கிளிக் மற்றும் செய்தியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதேசமயம், தேசத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நியூஸ் கிளிக் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கும் முக்கிய பிரமுகர்கள் 255 பேர் கடிதம் எழுதினர்.
இதைத் தொடர்ந்து, அதிரடியாகக் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், நியூஸ் கிளிக் இணையதள நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, 41 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புநிதி ஆகியவற்றை முடக்கினர். மேலும், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று 2021-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு அமலாக்கத்துறை கோரி இருந்தது. இதனடிப்படையில், நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கும், அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இது ஒருபுறம் இருக்க, தி நியூயார்க் டைம்ஸ் செய்தியைத் தொடர்ந்து, நிதி மோசடி தொடர்பாக நியூஸ் கிளிக் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அவரை கைது செய்யக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததால், அவரை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவின் அடிப்படையிலும் நியூஸ் கிளிக் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. எனினும், இதன் பிறகு இந்த வழக்கில் பெரியளவில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில்தான், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர், டெல்லியிலுள்ள நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட செய்தியாளர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, மும்பையிலும் டீஸ்டா செதல்வாட் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. இச்சோதனை முடிவில், டெல்லியிலுள்ள நியூஸ் கிளிக் அலுவலகத்தின் பிரதான அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, முக்கியப் பங்குதாரர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர்.