சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும், 169 நகரங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் 10,000 இ – பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், போக்குவரத்தைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளது.
மாசு ஏற்படுத்தும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைத் தவிர்த்து, பேட்டரியில் இயங்கும் பைக் மற்றும் கார் ஆகியவற்றை மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.
தனியார் பேருந்து நிறுவனங்களும், சாலைகளில் மக்கள் பயன்பாட்டிற்காக மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் இ – பஸ் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுமார், 10 ஆயிரம் இ – பேருந்துகளை இயக்க மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இ – பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, வேலூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை – ஆவடி, சென்னை – அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இ – பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும்பட்சத்தில், விரைவில் நடைமுறைக்கு வரும்.