சிக்கிம்மில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், 98 மி.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியதில், 23 வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம்மில், நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று காலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில், சில இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கின. இதிலிருந்த 23 ராணுவ வீரர்களைக் காணவில்லை என்று இராணுவம் உறுதி செய்திருக்கிறது. மேலும், டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதுகுறித்து சிக்கம் முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், “இந்த வெள்ளத்தில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், சிலரை காணவில்லை என்று புகார்கள் வந்திருக்கின்றன. அதேபோல, பொதுச்சொத்துக்கள் பலத்த சேதத்தை எதிர்க்கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார். தெற்கு சிக்கிம்மில் உள்ள நம்ச்சி மற்றும் நாம்தாங் ஆகிய இடங்களில் முறையே 98 மி.மீ. மற்றும் 90.5 மி.மீ. மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதன்கிழமை காலை சிக்கிம் மாநிலத்தின் லாச்சென் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ராணுவ வாகனங்கள் மூழ்கின. 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, மாநில பேரிடர் ஆணையம் கூறுகையில், “மாங்கன் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மழை பெய்திருக்கிறது. இதுவே டீஸ்டா நதிப் படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாகும். எனவே, இந்த நதியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். சுங்தாங்கில் உள்ள ஏரி உடைந்ததால் தற்போது நதியின் நீர் மட்டம் தொடர்ந்து வருகிறது. எனவே, கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வெண்டும்” என்று அறிவுறுத்தி இருக்கிறது.