நமக்கு தேசமே முதன்மையானது என ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 3 -ம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே மற்றும் சின்மயா மிஷன் ஸ்வாமிஜி ஸ்ரீ மித்ரானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சின்மயா மிஷன் இரண்டும் ஒரே அமைப்புகள்தான், வேறுவேறு அல்ல.
ஒரு காட்சியை இரு கண்களும் காண்பதுபோல, ஒரு விசயத்தை இரு காதுகளும் கேட்பது போல, இரு நுரையீரல் ஒரே சுவாசம் போல, பின்னிப்பிணைந்த அமைப்புகளாகும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் சின்மயா மிஷன் இணைந்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகிறது.
தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்றுதான். இந்த தேசத்தின் விடுதலைக்குத் தியாகம் புரிந்த அனைவரும் இதை உறுதியாக நம்பினார்கள். இந்த தேசத்திலிருந்த ஒவ்வொருவரும் மண்ணுக்காக, தேசத்திற்காகப் போராடித் தூக்கு மேடை ஏறியவர்கள், கையில் கீதையுடனும், உதட்டில் புன்முறுவலுடனும் அதை ஏற்றுக் கொண்டனர். இது போன்ற நமது முழுமையான வரலாறு, பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்கப்படவில்லை.
தற்போது, தேசம் ஜொலித்து வருகிறது, எழுச்சி பெற்று வருகிறது. மக்கள் மத்தியில் தேச பக்தி அதிகரித்து வருகிறது. தேசம் என்பது தர்மம், ஆன்மா, மக்களின் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சனாதன தர்மம் தான் நமது தேசியம் என்றார் மகான் அரவிந்தர். ஆனால், சிலர் இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இது அறியாமை அல்ல, மாறாகத் திட்டமிட்ட சதி.
தேசம் என்பது நிலப்பரப்பு, மக்கள் மற்றும் அதன் கலாச்சாரம், இந்த மூன்றும் ஒன்று சேர்ந்ததே ராஷ்ட்ரம். இதற்காகவே, ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது. இவற்றை வலுப்படுத்த வேண்டும். இதுவே நமது லட்சியம்.
தேசமே நமக்கு முதன்மையானது. அதனுடன் நமக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்பு உள்ளது. இதுவே நமது கலாச்சாரம், இதையே ஹிந்து, சனாதனம், பாரதீயம் எனப் பல பெயர்களில் அழைக்கிறோம்.
அனைத்து மாநிலங்களில் உள்ள மக்களும், தங்கள் பிள்ளைகளுக்கு ராமர், கிருஷ்ணர் எனப் பெயர் வைத்துள்ளார்கள். இதன் மூலம், ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இந்த மண்ணுடனும், மக்களுடனும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள முடியும்.
ராமர் தெற்கிலிருந்து வடக்கையும், கிருஷ்ணர் மேற்கிலிருந்து கிழக்கையும் இணைகிறார்கள். சிவனும், சக்தியும் பாரதம் முழுவதும் இணைகிறார்கள்.
கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப அமைப்பு இவற்றுடன் கோவில்கள், கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறை இவை அனைத்துமே நமது நெறிமுறையுடன் இணைந்தவையாக உள்ளது.
1964 -ல் விஸ்வ ஹிந்து பரிஷத் துவக்கப்பட்டது. அதற்குச் சுவாமி சின்மயானந்தர் மிகுந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அதனாலேயே, அதன் முதல் செயல் தலைவராகவும் அவர் செயல்பட்டார்.
அதேபோல, ராமஜன்ம பூமி இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவரும் சுவாமி சின்மயானந்தரே. அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதைத் தனது கடமைகளில் ஒன்றாகக் கருதி சிறப்பாகச் செயல்பட்டார்.
மக்களின் தியாகம், உணர்வு, சிந்தனை இவற்றால் ஒரு தேசம் உருவாகிறது. குருஜி கோல்வால்கர் மற்றும் சுவாமி சின்மயானந்தா இருவரும், தேசமே முதன்மை எனும் ஒரே லட்சியத்தை அடைய வெவ்வேறு மார்க்கங்களில் பணியாற்றினார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து, சுவாமி மித்ரானந்தா பேசுகையில், தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்திற்கு பணியாற்றுவதே தங்கள் முதல் கடமையாகக் கருதி பணியாற்றுகிறார்கள். சுவாமி சின்மயானந்தா மற்றும் குருஜி கோல்வால்கர் இருவருக்கும் இடையே ஒருமித்த சிந்தனை இருந்தது. அதுவே, அவர்களை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைத்தது எனக் குறிப்பிட்டார்.