டொமினிகன் குடியரசு துணைத் தலைவர் ராகுல் பெனாவை, டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
டொமினிக்கன் குடியரசு நாட்டின் துணைத் தலைவர் ராகுல் பெனா, 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். நேற்று காலை டெல்லியை வந்தடைந்தவர், முதலில் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். அப்போது, அவரது இந்தியாவுக்கான முதல் வருகையை வரவேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, இந்தியாவும், டொமினிகன் குடியரசும் தங்களது இராஜதந்திர உறவுகளின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த விஜயத்தின் நேரம் மிகவும் பொருத்தமானது என்றார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்புடன் இருப்பதாகவும், உலகளாவிய பிரச்சனைகளில் பரந்த பார்வைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர், லத்தீன் அமெரிக்காவில் டொமினிகன் குடியரசு இந்தியாவின் 8-வது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளதாகவும் கூறினார். அதேபோல, மருந்துப் பொருட்கள், கடல்சார் அறிவியல், வானிலை ஆய்வு, பேரிடரை எதிர்க்கும் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் எங்களது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்றார்.
தொடர்ந்து, இந்தியா – டொமினிகன் குடியரசு ஒத்துழைப்பின் மையத் தூண்களில் திறன் மேம்பாடும் ஒன்று என்று கூறிய குடியரசுத் தலைவர் முர்மு, சமீபத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் ரிமோட் சென்சிங் ஆகிய முக்கியமான துறைகளில் டொமினிகன் குடியரசு அதிகாரிகளுக்கு இரண்டு சிறப்பு ஐ.டி.இ.சி. பயிற்சி வகுப்புகளை இந்தியா ஏற்பாடு செய்திருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதோடு, இந்தியாவிற்கும் டொமினிகன் குடியரசுக்கும் இடையிலான தொடர் பரிமாற்றங்களும், தொடர்புகளும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதன் பிறகு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் பெனா அஞ்சலி செலுத்தினார். மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்கும் சென்றார். அங்கு அவரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். தொடர்ந்து, ராகுல் பெனாவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் புதுப்பிக்கத்தக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சனைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இன்று துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கரை சந்தித்து பேசும் ராகுல் பெனா, இந்திய உலக விவகார கவுன்சிலின் 45-வது கூட்டத்திலும் உரையாற்றுகிறார். நாளை ஆக்ராவுக்கு செல்கிறார்.