தேசிய அளவில் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் கீழ், சுமார் 64,000 பேர் தங்களது உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் பவ திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். மேலும், செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும், இந்நிகழ்ச்சியின்போது 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறும் திட்டமாகும்.
அதன்படி, இத்திட்டம் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் 64,000 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்து, பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “ஆயுஷ்மான் பவ திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2.70 லட்சம் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், 1.61 கோடி மக்கள் பயன் பெற்றனர். இத்திட்டத்தின் கீழ், சுமார் 64 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டது. 1 கோடிக்கும் அதிகமான ஏ.பி.ஹெச்.ஏ. அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின் கீழ், 14,157 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 2,28,000 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. அதோடு, 23 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் ஓ.பி.டி. ஆலோசனைகளுக்கு வருகை தந்தனர். இது தவிர, 30,000 பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, ஒவ்வொரு கிராமம் மற்றும் பஞ்சாயத்தில் உள்ள ஆயுஷ்மான் சபைகள் மூலம் சுகாதார சேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.