இரண்டு இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை, இந்திய விமானப் படையிடம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் இன்று ஒப்படைத்தது. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் பெற்றுக்கொண்டார்.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், தேஜாஸ் எனப்படும் இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 83 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும், எதிர்வரும் காலங்களில் 220 போர் விமானங்கள் கொண்ட மிகப்பெரிய விமானப்படையை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், இந்த தேஜாஸ் விமானங்களில் ஒரே ஒரு விமானி இருக்கை மட்டுமே இருக்கும்.
இந்த நிலையில், 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை தயாரிக்க ஹெச்.ஏ.எல். நிறுவனம் முன்வந்தது. இதையடுத்து, 2 இருக்கைகள் கொண்ட 18 விமானங்களுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இதில், முதல்கட்டமாக இந்தாண்டு 8 விமானங்களும், 2026-2027-ம் நிதியாண்டில் 10 விமானங்களையும் வழங்க ஹெச்.ஏ.எல். முன்வந்தது. அந்த வகையில், முதல் விமானம் இன்று வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தலைமையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், இந்த விமானத்தை இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்.) தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சௌத்ரி, “இன்று ஒரு முக்கியமான நாள். 2 இருக்கைகள் கொண்ட முதல் இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டிய நாள். இந்த நாள் இந்திய உள்நாட்டு விமானத் துறையின் திறமையை வெளிப்படுத்தும். வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. மேலும், விமானப்படையின் செயல்திறன் மற்றும் சக்தியை அதிகரித்திருக்கிறது” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், “மேம்பட்ட அம்சங்களுடன் இரட்டை இருக்கைகள் கொண்ட தேஜாஸ் மூலம் ஆத்மா நிர்பார் பாரதத்தின் குறிக்கோள் நிறைவேறி இருக்கிறது. இன்று ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம். மேலும், இது உள்நாட்டு திறன்களை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும்” என்றார். நிகழ்ச்சியில், ஹெச்.ஏ.எல். நிர்வாக இயக்குனர் சி.பி.அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்த போர் விமானம் 4.5 தலைமுறை விமானம். அனைத்து காலநிலையிலும் பறக்கக் கூடிய திறன் படைத்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விமானம், நிலையான நிலைத்தன்மை, விமானக் கட்டுப்பாடு, மேம்பட்ட கண்ணாடி காக்பிட், ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் ஏர்ஃப்ரேமிற்கான மேம்பட்ட கலவைப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.