மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக 6,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து உள்ளதால், சுமார் 15 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 89 அடியாக இருந்த நிலையில், மேலும் சுமார் 4 அடி உயர்ந்து, இன்று 92.75 அடியை எட்டியது. மேலும், பாபநாசம் அணை பகுதிகளில் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 107.61 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 3247 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், சேர்வாறு அணை பகுதிகளில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 28.75 அடி நீர் இருப்பு உள்ளது.
தொடர் விடுமுறை என்பதால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கன்னிமாரா தோப்பு ஓடையில் குளிக்க இன்று காலை வந்தனர். ஆனால், தொடர் சாரல் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.