கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, ஊட்டியில் ‘வரவேற்பு பூங்கா’ உருவாக்கப்பட்டுள்ளது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, ஊட்டி நகரின் முகப்பு வாயிலான எச்.பி.எப். பகுதியில், ‘வரவேற்பு பூங்கா’ உருவாக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்டத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரியக் குடில், வனத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உருவங்கள், யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுச் சிறப்பாகப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும், குளு குளு காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்தக் குளுமையை அனுபவிக்கவும், இயற்கை அழகை பார்த்து இரசிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் கடந்த சில நாட்களாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.