இத்தாலியில் வெனிஸ் நகருக்கு அருகே உள்ள பாலத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மார்கெராவுக்கு இத்தாலியர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. இது வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது, மேம்பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது.
பேருந்து சாலையை விட்டு விலகி இரயில் பாதைகளுக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து முற்றிலும் நொறுங்கியதால், இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுப்பதில் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர்.
இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.