2023-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசும், செவ்வாய் கிழமை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மவுங்கி பவெண்டி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் புரூஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நேனோ தொழில்நுட்பத்தில், உயர் தொழில்நுட்ப பிரிவான “குவான்டம் டாட்ஸ்” துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர். இது மின்னணு துறையிலும், மருத்துவத் துறையிலும் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியுள்ளது.