ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் ஒரு வாரம் நடத்திய தாக்குதலில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உட்பட சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சூழலில், ரஜோரி மாவட்டம் கலகோட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் மாநில காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராணுவத்தினரும், மாநில காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, கலகோட் வனப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு ஜவான்கள் காயமடைந்தனர். இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குல்காம் மாவட்டத்திலும் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, குஜ்ஜார் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதுகுறித்து மாநில காவல்துறை மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், “குல்காம் மாவட்டத்திலுள்ள குஜ்ஜார் பகுதியில் என்கவுன்ட்டர் தொடங்கி இருக்கிறது. மாநில காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இந்த என்கவுன்ட்டரில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன . சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.