தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என மத்திய தகவல் தொடர்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியாவில் மஞ்சள் ஏற்றுமதி மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, 1,600 கோடி மதிப்பிலான மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரும் காலத்தில், ரூ.8,400 கோடி மதிப்பிலான மஞ்சள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்ட வேண்டும் எனில், மஞ்சள் வாரியம் தேவை.
தேசிய மஞ்சள் வாரியம் மாநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கும். மேலும், மஞ்சள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். சர்வதேச அளவில் சந்தைகளைக் கண்டறியவும், உருவாக்கவும் தேசிய மஞ்சள் வாரியம் உதவும்.
குறிப்பாக, மதிப்புக் கூட்டப்பட்ட மஞ்சள் மூலம் வருவாயைப் பெருக்க முடியும். மஞ்சள் ஆராய்ச்சி, சந்தை மேம்பாடு, நுகர்வு அதிகரிப்பு, மதிப்புக் கூட்டல் போன்றவற்றில் தேசிய மஞ்சள் வாரியம் தேவையான உதவிகளைச் செய்யும்.
மத்திய அரசால் நியமிக்கப்படும் தலைவர், ஆயுஷ் அமைச்சகத்தின் உறுப்பினர்கள், மருந்துகள், விவசாயம், விவசாயிகள் நலன், வர்த்தகம், மத்திய அரசின் தொழில்துறைகள், மற்றும் மூன்று மாநிலங்களிலிருந்து 3 அரசு பிரதிநிதியை நியமிக்கப்படுவார்கள். உலகத்திலேயே மஞ்சள் வர்த்தகத்தில் இந்தியா 62 சதவீதம் பங்கு வகிக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றார்.