சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 102 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம்மில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், 100 மி.மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, லாச்சென் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டீஸ்டா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இராணுவ வாகனம் வெள்ளத்தில் மூழ்கியதில் 23 ஜவான்களை காணவில்லை என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சிக்கிம் தலைமைச் செயலாளர் வி.பி.பதக் பகிர்ந்துள்ள தகவலின்படி, “மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக லோனாக் ஏரியின் கரை உடைந்து டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. டீஸ்டா ஸ்டேஜ் 3 அணை உடைந்த சுங்தாங்கில் 12 முதல் 14 தொழிலாளர்கள்வரை இன்னும் அணையின் சுரங்கங்களில் சிக்கித் தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 26 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 உயிரிழந்துள்ளனர். 102 பேரை காணமவில்லை. பர்தாங்கில் 23 இராணுவ வீரர்களை காணவில்லை என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, 3,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 கூடுதல் படைப்பிரிவுகளை மாநில அரசு கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு படைப்பிரிவு ரங்போ மற்றும் சிங்டம் நகரங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. தற்போது, வரவிருக்கும் படைப்பிரிவு மீட்பு நடவடிக்கைகளுக்காக சுங்தாங்கிற்கு விமானம் மூலம் அனுப்பப்படும்.
அதேபோல், உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, வானிலை மேம்பட்டவுடன் உணவு மற்றும் சிவில் சப்ளைகள் சுங்தாங்கிற்கு கொண்டு செல்லப்படும். இதற்கிடையே, மாநிலத்தில் ரேஷன் தட்டுப்பாடு ஏற்படும் என்று மாநில அதிகாரிகள் அஞ்சுகின்றனர். சிலிகுரி, பெய்லி பாலங்களில் இருந்து தேவையான பொருட்கள் இந்திய இராணுவம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் அமைக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
பெருவெள்ளத்தில் சுங்தாங்கில் உள்ள காவல் நிலையம் கூட அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மங்கன் மாவட்டத்தில் உள்ள சங்கலான் மற்றும் டூங்கில் ஃபிளாஷ் வெள்ளத்தால் ஃபைபர் கேபிள் இணைப்புகளும் அழிக்கப்பட்டதால், சுங்தாங் மற்றும் வடக்கு சிக்கிமின் பெரும்பாலான மொபைல் நெட்வொர்க் இணைப்பு தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக, சிங்டம், ரங்போ, டிக்சு மற்றும் ஆதர்ஷ் காவ்ன் ஆகிய இடங்களில் 18 நிவாரண முகாம்களை மாநில அரசு அமைத்திருக்கிறது.
எனினும், சுங்தாங்குடன் தொடர்பு இல்லாததால், அங்குள்ள நிவாரண முகாம்களை இந்திய இராணுவம் மற்றும் பிற துணை இராணுவப் படையினர் அமைத்து வருகின்றனர்.