குமரியில் தொடர்ந்து கனமழை கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குமரியின் மங்காடு பகுதியிலிருந்து முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை வரை மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் சாலையின் இருபுறமும் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் வெளியே வரமுடியாத நிலை உருவாகியுள்ளது.
நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக, ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளிலும், விளை நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது. விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும், குளங்களும் நிரம்பி வருகின்றன.
குமரி மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அதில் இதுவரை 902 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 1,102 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன.
இந்த நிலையில், தண்ணீர் வரத்து அதிகமானதால், நாவல்காடு பகுதியில் உள்ள குளத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் அதிகளவில் வெளியேறி வருவதால், சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலிருந்த பயிர்களில் தண்ணீர் தேங்கியது. மேலும், கல்படி குளம் உள்பட மொத்தம் 3 குளங்கள் உடைந்துள்ளன.