முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், சொகுசு ஹோட்டல், மருத்துவமனை, கல்வி நிறுவனம் உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னை அடையாற்றில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், தி.நகரில் உள்ள சொகுசு ஹோட்டல், பள்ளிக்கரணையில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் இன்று காலை முதல் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணி அளவில் காரில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சோதனை நடைபெறும் இடங்களிலிருந்து உள்ளே இருந்து வெளியே செல்லவும், வெளியே இருந்து உள்ளே செல்லவும் யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
தமிழகத்தில், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு திமுக அமைச்சரான பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதோடு, அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர். ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.