காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் 1.52 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து, கையால் நெய்யப்பட்ட துணியை வாங்குவது நாடு முழுவதுமுள்ள மக்கள் உணர்வின் அடையாளமாக மாறி இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் காதிப் பொருட்களை வாங்கி தேசிய உணர்வை வெளிப்படுத்தும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் காதி பவன்களுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
அந்த வகையில், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் முதல் வாடிக்கையாளராக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) தலைவர் மனோஜ் குமார், காதி ஆடைகளை வாங்கி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தினார். தொடர்ந்து, காதி பவனில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில், கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் ஒரே நாளில் 1.52 கோடி ரூபாய் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.
இதுகுறித்து, காதி இந்தியா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், காதியின் பாதுகாவலரும், புதிய இந்தியாவின் நவீன சிற்பியுமான பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாதி நிகழ்ச்சியில் பேசியபோது, காந்தி ஜெயந்தி தினத்தன்று காதிப் பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோல் விடுத்திருந்தார். இதன் விளைவாக, காதி வரலாற்றில் முதன் முறையாக டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் ஒரே நாளில் 1.52 கோடி ரூபாய்க்கு காதிப் பொருட்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில், காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளை வாங்குவதில் டெல்லி மக்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியின் மையப் பகுதியான கன்னாட் பிளேஸில் உள்ள முதன்மையான காதி பவனில், இதுவரை இல்லாத வகையில் 1,52,45,000 ரூபாய் மதிப்புள்ள காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் விற்பனையானது” என்று தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாடு முழுவதும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் காதிப் பொருட்களை வாங்குவதில் புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். இது நாட்டு மக்கள் உணர்வுகளின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. காதி மீதான இந்த காதல் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைக்கும். இது தன்னிறைவு பெற்ற இந்தியாவின் பார்வைக்கு புதிய வலிமையைத் தரும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபத்திய விற்பனைத் தரவுகளின்படி, கடந்த 2021-22-ம் நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் விற்பனை ரூ.1.01 கோடியாக இருந்த நிலையில், 2022-23-ம் நிதியாண்டில் 1,33,95,000 ரூபாயாக இருந்தது. இந்த முறை 1,52,45,000 ரூபாயாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
देशभर के हमारे परिवारजनों ने खादी की खरीदारी का जो नया रिकॉर्ड बनाया है, उससे पता चलता है कि यह किस प्रकार जनभावना का एक सशक्त प्रतीक बन गई है। मुझे विश्वास है कि खादी के प्रति यह लगाव नित-नए रिकॉर्ड बनाता रहेगा, जिससे आत्मनिर्भर भारत के विजन को नया बल मिलेगा।… https://t.co/bxwIBQKgcf
— Narendra Modi (@narendramodi) October 5, 2023