டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த அக்டோபர் 2-ம் தேதி கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவர வழக்கில் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்த பொறியாளரான ஷாநவாஸ் சஃபி உஸாமா, தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். மேலும், இவரைப் பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதோடு, துப்புக் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர், சந்தேகத்தின் பேரில் ஷாநவாஸ், ரிஸ்வான், அர்ஷத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், 3 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும், நாட்டின் பல்வேறு இடங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில்தான், இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, கைது செய்யப்பட்ட அர்ஷத், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர், கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும், 2020-ம் ஆண்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக்கில் நடந்த கலவரத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.
மேலும், மகாராஷ்டிர மாநிலம் புனே காவல்துறையில் இருந்து தப்பிய, என்.ஐ.ஏ.வால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷாநவாஸுக்கு டெல்லியில் அடைக்கலம் கொடுத்தது இந்த அர்ஷத்தான். இருவருக்கும் நீண்டகாலமாக பழக்கம் என்பதும், இருவரும் சேர்ந்து தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது.