ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் சிறப்புச் சலுகைகள், சில்லறைக் கடைகளில் கிடைக்காது என்று நடிகர் அமிதாப் விளம்பரத்தில் பேசியிருப்பதால், தங்கள் வியாபாரம் பாதிக்கும் என்றும், இதனால், நடிகர் அமிதாப்பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஏடி) சார்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஃப்ளிப்கார்ட். இந்த நிறுவனம் பிக் பில்லியன்டே விற்பனையை அறிவித்துள்ளது. இதற்காக, நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ள விளம்பரம் ஒன்றை, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், பேசிய பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் சிறப்புச் சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு சில்லறைக்கடை வியாபாரிகளும், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விளம்பரம், சட்ட விரோத விளம்பரமாகும், இது நுகர்வோரைத் தவறாக வழி நடத்தும் என்றும், எனவே இந்த விளம்பரத்தை உடனே தடை செய்ய வேண்டும், விளம்பரத்தில் நடித்த நடிகர் அமிதாப்பச்சனிடம் இருந்து ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது.
இதனால், நடிகர் அமிதாப் பச்சன் தேவையற்ற சிக்கலில் போய் சிக்கிக் கொண்டார் என பாலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.