தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குளிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தது. இதனால், அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அருவிப் பகுதியில் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக, அருவிப் பகுதியிலிருந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலால், வன விலங்கு ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று யானைக் கூட்டங்கள் சுருளி அருவிப் பகுதிக்கு வந்தது. தற்போது ஆறு யானைகள் வனத்துறை சோதனைச் சாவடி பகுதியில் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், சுருளி அருவிக்குச் செல்லும் நுழைவு வாயிலை மூடினார். அப்போது, அருவிகளில் குளிக்க ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகளை, வனத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனால், ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது, சுருளி அருவிக்குச் செல்லும் வனப்பகுதியில் யானைகள் இருப்பதால், சுருளி அருவிக்குச் செல்லவோ, குளிக்கவோ சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற பிறகுதான் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.