நடிகர் விஷால் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு லஞ்சம் அளித்த விவகாரத்தில் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள திரைப்பட தணிக்கை குழுவை அணுகியபோது, அவர்கள் 7 இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இறுதியாக 6.5 இலட்ச ரூபாய் கொடுத்த பின்னரே தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் விஷால் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இதனை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், தணிக்கை குழு உறுப்பினர்கள் மூன்று பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்க ஏழு இலட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதும், இறுதியாக 6.50 இலட்ச ரூபாய் இலஞ்சமாக பெற்று சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது.
இந்த இலஞ்சப்பணம் தணிக்கை குழு உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.