முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனு க்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் வருமானவரித்துறையினர் 2-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக, அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், தி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவரியம்பாக்கம் மற்றும் இளையனூர் வேலூர் பகுதிகளில் உள்ள பிரபல மதுபான ஆலை, வாலாஜாபாத்தில் உள்ள அவரது உறவினர் குப்பன் வீடு,
பாலாஜி மற்றும் ரெலா மருத்துவமனை, குரேம்பேட்டையில் உள்ள மற்றோரு மருத்துவமனை உள்ளிட்ட சுமார் 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், 2-வது நாளாக இன்றும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு 10 மணி வரை சோதனையை மேற்கொண்டவர்கள், அத்துடன் முதல்நாள் சோதனையை நிறைவு செய்துவிட்டு, இன்று காலை முதல் மீண்டும் 2-வது நாள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2-வது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதால், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.