கொடைக்கானல் நகரில் காட்டெருமைகள் நடமாட்டம் காரணமாக, பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில், நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்குள்ள வனப்பகுதிக்குச் சென்று ஆர்வமுடன் சுற்றுலாவைக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், பாதுகாக்கப்பட்ட ஏரியான பேரிஜம் ஏரிக்கு, தண்ணீர் அருந்துவதற்காக, யானைகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். அதுபோல், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வந்து செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம், செண்பகனூர், அண்ணாசாலை, டிப்போ, கான்வென்ட்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் பகல் நேரத்திலேயே காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நகர்ப் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.