தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியாமல், மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.
கடந்த காலத்தில், 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 2023-2024 கல்வி ஆண்டு துவங்கி 4 மாதம் காலம் நிறைவு பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு எந்த ஒரு முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை.
அடுத்த ஆண்டு, நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்வு நடத்துவார்களா? அல்லது தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்வு நடத்துவார்களா? என்று மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருகிறது. அந்த குழப்பத்தில், இதுவும் ஒன்று. எனவே, மாணவர்கள் எதிர்கால நலன் கருதி, பள்ளிக் கல்வித்துறை விரைந்து முடிவு எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.