என்எல்சி-க்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைக்கச் சென்ற அந்நிறுவன அதிகாரிகளைக் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கப் பணிக்காக சேத்தியாதோப்பு பகுதியில் விளைநிலங்களைக் கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடுகளையும் வழங்கியது. ஆனால், அந்த நிலங்களை என்எல்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் வைக்கவில்லை.
இதனால், விவசாயிகள் வழக்கம் போல் நிலங்களில் பயிர் செய்து வந்தனர். தங்களுக்கு வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகை மிகக்குறைவானது என்று கூறி போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
கடந்த ஜூலை மாதம், சேத்தியாதோப்பு பகுதியில் என்எல்சி நிர்வாகம் தனது சுரங்கத் தேவைக்காக வாய்க்காலை வெட்டியது. இதற்கு, விவசாயிகள், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இப்பகுதி விளை நிலங்களுக்குக் கூடுதல் இழப்பீடு என்எல்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில், சேத்தியாத் தோப்பு அருகே உள்ள மும்முடிச் சோழகன் கிராமத்தில் என்எல்சி நிறுவனம், தமது இடங்களில் வேலி அமைக்க நிலத்தை சமன் செய்தது. மேலும், தகவல் அறிந்த மும்முடிச் சோழகன் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, நிலம் சமன் செய்வதைத் தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகளை என்எல்சி அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் வேறு ஒரு பகுதியில் நிலம் சமன் செய்யும் பணியில் என்எல்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் கிராம மக்கள் சென்று, அதை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.