மதுபான கொள்கை மோசடி வழக்கில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கை 5 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மீண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
புதுடில்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த, 2021 – 2022–ம் நிதியாண்டில், புதுடில்லி மதுபான கொள்கை விவகாரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தப்பட்டது எனவும், இதன் வாயிலாக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் புகார் எழுந்தது.
இந்த மோசடியை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இதில் நடந்துள்ள பண பரிமாற்ற மோசடியை அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
இந்த மோசடியில் இடைத்தரகராக செயல்பட்ட, தினேஷ் அரோரா என்ற தொழிலதிபர், ஆம் ஆத்மி எம்.பி.,யான சஞ்சய் சிங்கிற்கு ரூ. 3 கோடி லஞ்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து சஞ்சய் சிங்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்திய நிலையில் எம்.பி., சஞ்சய் சிங்கை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மாலையில் கைது செய்தனர். டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்டடார். அவரை 5 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சஞ்சய் சிங்கின் 5 நாள் காவல் முடிந்து அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோருக்குப் பிறகு மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூன்றாவது முக்கியத் தலைவர் சஞ்சய் சிங் ஆவார்.