கள்ளச் சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்ற மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 8 ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
இதற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் சிலர் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, ஹாஸ்ல் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் கள்ளச்சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவை தெற்கு பாளையத்தைச் சேர்ந்த ராகுல், பெங்களூரைச் சேர்ந்த ரமணா , ஹைதராபாத்தைச் சேர்ந்த பால்கோரி பிரநாத் ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிமிருந்து 40 டிக்கெட்டுகள், 4,500 ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.