திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த, உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலரும் முக்கொம்பு கரைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன் ஆகியோர் வந்தனர். அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர்.
இந்த நிலையில் கரைப்பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட காவலர்கள், அங்கு சென்று காதல் ஜோடியை மிரட்டி, தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர். பிறகு சிறுமியைக் காருக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, ‘நாங்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும், என்று சிறுமியை மிரட்டி, அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.
இதை அடுத்து காதல் ஜோடிகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து உதவி ஆய்வாளர் உட்பட 4 காவலரும் வந்தனர். அவர்கள் காவலர்கள்தான் என்பதைப் புறக்காவல் நிலைய காவலர்கள், அந்த காதல் ஜோடியிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து திருச்சி தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் நேரில் சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து தனிப்படை துணை ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சித்தார்த்தன், சங்கர் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.
மேலும் சிறுமி அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.