ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 100 பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின், ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள், சிறப்பாக விளையாடி பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100 பதக்கங்களைத் தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 100 பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை! 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணமான, நமது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களைப் பெருமையால் நிரப்பியது. வருகிற 10-ஆம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.