குமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுகிர்தா மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார்.
மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் வகுப்பிற்குச் சென்றுவிட்ட நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி, சுகிர்தா மட்டும் விடுதி அறையிலேயே தங்கிவிட்டார். மாலையில் சக மாணவர்கள் வந்து பார்த்த போது சுகிர்தா இந்த உலகை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டார் எனத் தெரிய வந்தது.
காவல்துறைக்கு தகவல் பறிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த குலசேகர போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறுவை சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தினை பயன்படுத்தி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தரப்பினரும், இல்லை இல்லை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். உண்மையில் அவரது மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.
இதனிடையே, சுகிர்தா அறையில் ஒரு கடிதத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு 3 பேராசிரியர்தான் காரணம் என சுகிர்தா மிக தெளிவாக தெரிவித்துள்ளார்.