ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின், ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள், சிறப்பாக விளையாடி பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், மகளிர் பிரிவில் நடந்த கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனத் தைபே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 26 – 24 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுத் தங்கப்பதக்கத்தை வென்றது.
இதன் மூலம், 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 100 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ஜகர்தாவில் 2018-ஆம் ஆண்டு நடந்த போட்டியில், 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என 70 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சாதனையாக இருந்தது.
இதற்கிடையே ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 100 பதக்கங்கள் என்பது சாத்தியமற்றதாக பேசப்பட்டது. ஆனால், குதிரையேற்றம், படகோட்டுதல் போன்ற பிரிவுகளில் எதிர்பாராத வெற்றிகள் கிடைத்ததுடன் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் தடகளத்திலும் இந்தியா பெரிய அளவிலான வெற்றிகளைப் பெற்றது.
இதன்மூலம் முன்னெப்போதும் இல்லாத சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய வீரர்கள் இன்னும் சில போட்டிகளில் விளையாட உள்ளதால், பதக்கங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது.