முருகனின் 3-ம் படை வீடாக போற்றப்படுவது அருள்மிகு பழனி மலை திருக்கோவில். இங்குள்ள முருகர் சிலை, போகர் என்ற சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால், இந்த சிலை, மற்ற சுவாமி சிலைக்காட்டிலும் சக்தி அதிகம்.
இங்கு தண்டாயுதபாணியாகக் காட்சி தரும் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால், பஞ்சாமிர்தம், தீர்த்தத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.
பழனி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினசரி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பக்தர்களின் வசதிக்காக, மலையின் கீழே இருந்து மலைமேல் செல்ல 2004 -ம் ஆண்டு முதல் ரோப் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.
மலை மீது உள்ள 323 மீட்டர் தூரத்தை வெறும் 3 நிமிடங்களில் கடக்கிறது. ஒவ்வொரு ரோப் காரிலும் 4 இருக்கைகள் உள்ளன. ஒரு வழிப் பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.15ம், சிறப்புக் கட்டணமாக ரூ.50 -ம் வசூல் செய்யப்படுகிறது.
ரோப் காரில் இருந்து பார்த்தால், பழனி நகரம், வயல்வெளிகள், பூங்கா, மலர்ச் செடி, மேற்குத் தொடர்ச்சி மலை என திரும்பிய திசை எல்லாம் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்து படைக்கிறது. இதனால்தான், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் ரோப் காரில் விரும்பி பயணம் செய்கின்றனர்.
ஏன் நீங்களும் ஒரு முறை ரோப் கார் பயணத்தை தொடரலாமே…!